
(Kingston பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் Andy Higginbottom, 2013 இல் பிரேமன் நகரில் இடம்பெயற்ற நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் சிறிலங்கா பற்றிய அமர்வின் வழக்கை முன்னெடுத்தவர். சுவிட்சலாந்தில் நடக்கும் தமிழருக்கெதிரான வழக்கின் பின்னணியை அவர் விளக்ககிய உரையின் சாரம்.)
சுவிட்சலாந்து, பெலின்சோனாவில் நடக்கும் வழக்கை இரண்டு எதிரெதிரான கோணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். எம்மை பொறுத்தமட்டில் இதன் அடிப்டையான விடயம் ”தமிழர்களுக்கு விடுதலை பெற உரிமை உள்ளதா?” என்பதே.
மனிதம் என்பதன் அடிப்படை மக்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதே. தமிழர்களின் வரலாற்று அனுபவங்களை வைத்துப் பார்த்தால், சுதந்திர தாயகத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதா என்பதே இதன் அர்த்தமாக இருக்க முடியும். இந்த அடிப்படையில், இந்த வழக்கை, தமிழர்களுக்கு சுதந்திர தாயகத்திற்கான உரிமை உள்ளது என்றும், அவர்களின் மனிதத்தின் வெளிப்பாடாக இது இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாமா? மாறாக இதை ஒரு கிரிமினல் குற்றமாக அல்லது பயங்கரவாதமாக புரிந்து கொள்ளலாமா?
எந்தவொரு கிரிமினல் குற்றத்திந்கும் ஒரு காரணம் இருக்கும். தமிழருக்கு எதிரான இனவழிப்புக்கும், 2009 இல் அதன் உச்சத்திற்கு அது சென்றதற்கும், அது இன்னும் வேறு வழிகளில் தொடர்வதற்கும் மூலகாரணமாக ஒன்று உள்ளது. சிறிலங்காவை மேற்குலக சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தெற்காசியாவையும் இந்திய பெருங்கடலையும் ஆளவேண்டும் என்ற எண்ணமே அது. சுவிட்சலாந்து வழக்கில் இனவழிப்பிற்கான இந்த அடிப்படை நோக்கம் மறைந்து கிடக்கிறது. இருந்தாலும் அதன் ஒவ்வாரு செயலிலும் இதை உணர முடிகிறது.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பிரேமன் அமர்வில் பல மறுக்கமுடியாக சாட்சிகள் சமர்ப்பிக்கப்ட்டன. அதன் பின்னரும் பழைய ஆவணங்களை ஆய்வு செய்ததின் மூலம் இவை, குறிப்பாக சிறிலங்கா அரசின் தொடரும் நவகாலனித்துவ நிலைமை, இன்னும் ஆழமாக நீரூபிக்கப்பட்டுளது. இவ்வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
பிரித்தானியாவும் பிரான்சும், 19ம் நூற்றாண்டில் இலங்கை தீவுக்காக போட்டி போட்டன. இதற்கு தெளிவான காரணம் இருந்தது. ஆழமான திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இந்துசமுத்திரத்தில் உள்ள ஒரேயொரு ஆழமான துறைமுகம் இதுவென்பதையும், அட்மிரல் நெல்சன், வெளிப்படையாகவே பேசினார். இப்போட்டியில் பிரித்தானியா பிரான்சை வென்றது. கடல்படையை கொண்டு கட்டியெழுப்பப்பட்ட பிரித்தானிய பேரரசுக்கு இது இப்பிராந்தியத்திற்கான முக்கிய துறைமுகம். பிரித்தானியாவுக்கு இதையும்விட இன்னுமொரு காரணமும் இருந்தது. இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு துறைமுகமாகவும் இது இருந்தது.
இரண்டாவது முறையாக, திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் வெளிப்படையாக இரண்டாம் உலக போரின் போது சொல்லப்பட்டது. ஜப்பான் இப்போரின் முதலாவது கட்டத்தில் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தது. பிரித்தானிய காலனியாளர்கள் பர்மாவிலிருந்து அவர்களின் வளங்கள் யாவற்றையும் சிறிலங்காவுக்கு மாற்றினார்கள். புலனாய்வு பிரிவுகளும், பர்மாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அத்தனை வளங்களும் சிறிலங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. அக்காலத்தில் இது ஒரு மூலோபாயமாக மட்டுமல்ல, திருகோணமலை அவர்களின் போர் செயற்பாட்டிற்கும் தேவையானதாகவும் இருந்தது. இதனால், 2ம் உலகப் போரின் போது பிரித்தானிய கப்பல்படை திருகோணமலையிலேயே தளங்களை அமைத்து, இங்கிருந்தே போர் அரங்கங்கள் எங்கும், பசுபிக் பிராந்தியம் உட்பட, பதில் தாக்குதல்களை செய்தது.
பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்த போது, மிகவும் அமைதியான முறையிலேயே இது நடந்தது. விடுதலைக்கான வன்முறைகள் இல்லாமல் சுதந்திரம் பெற்றதன் பின்ணியில், எதிர்கால பிரச்சனைகளின் விதை இருந்தது. இவ்வாறு வன்முறைகள் அதிகம் இல்லாமல் சுதந்திரம் பெற்றது, தொடர்ந்தும் பிரித்தானியா இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் பெறப்பட்டது. பொதுவாக, காலனியாதிக்கத்தின் முடிவில், விடுதலைப்போருக்கான வன்முறைகள், காலனியளர்களுக்கும் அவர்களின் சுரண்டல்களுக்கும் எதிராக இடம்பெறும். இங்கு அவ்வாறு அல்லாமல், திசைமாற்றப்பட்டது. சிங்கள பேரினவாதத்தில் இவை உள்ளடக்கப்பட்டு, தீவிலுள்ள ஏனைய அடக்கப்பட்ட மக்களின் மேல் வெறுப்பாக மாற்றப்பட்டது. ஆக, சிங்கள தேசியம் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டு, பிரித்தானியாவால் பயன்படுத்தப்பட்டது. வழமையான பிரித்தாளும் வழியில், ஆனால், இங்கு ஒற்றையாட்சி முறையில், தமிழர்கள் தீவின் ஒற்றையாட்சி ஊடாக நிரந்தரமாக இரண்டாம் தரத்தில் வைக்கப்பட்டார்கள். அதுவும் பிழைத்த போது, சிங்கள இனவாத சிந்தனைகள் மூலம் தொடர்ந்தும் இரண்டாம் தரமாகவே வைக்கப்பட்டார்கள். இதிலிருந்து தமிழர்கள் ஒருபோதும் ஒரு தேசமாக தம்மை அடையாளப்படுத்த முடியாதவாறு இருத்தப்பட்டார்கள். இரண்டாம் உலக போருக்கு பின்னரான காலத்தில், தமிழர்கள் ஒருபோதும் அவர்களின் அபிலாசைகளை அடைய முடியாதவாறு சிங்கள இனவாத சிந்தனை வளர்க்கப்பட்டு விட்டது. குறிப்பாக இது இனக்கலவரமாக பல முறை வெடித்தது.
இக்காலகட்டத்தில், இனக்கலவரங்கள், இலங்கையில் மட்டும் இடம்பெறவில்லை. அடக்கப்படும் மக்களுக்கு எதிரான இனவாதத்தின் ஒரு வடிவமான இனக்கலவரங்கள் அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத ஒன்று. இனக்கலவரமும் இனவழிப்பு அளவுக்கு முக்கியமான ஒன்று. ஏனெனில் அதிகமாக இவை இனவழிப்புக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றன. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிலும் ரசியாவிலும் யூத மக்களுக்கு எதிராக 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த இனக்கலவரங்கள் இனவெறுப்பை சதாரணமாக்கவும் அடக்கப்படும் மக்களுக்கு எதிராக சமூகத்தை தூண்டவும் உதவியது. ஐக்கிய-அமெரிக்காவில், உள்நாட்டு போர் 1865 இல் முடிவடைந்த பின்னரும், கருப்பின மக்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் தொடர்ந்தன. இது ஒரு நூற்றாண்டுகளாக, 1960களில் மாட்டின் லூதர் கிங்கின் சமூக உரிமை போராட்டம் வரை தொடர்ந்து. ஆக, இனக்கலவரம் ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறுப்பை அடிப்படையாக கொண்ட சமூக செயற்பாடு. இதில், அடக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதரங்கள், உயிர்கள் அழிக்கப்படும். இப்படியான ஒரு நிலைமையிலேயே ஒரு திருப்பு முனை உருவாகிறது.
தொடர்ந்தும் பாதிக்கப்ட்டவர்களாகவே இருக்க முடியாது என்ற நிலைமைக்கு தமிழர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்நிலைப்பாட்டை 1970களில் அவர்கள் எடுக்கிறார்கள். இதே காலத்தில் தான் வியட்னாம் மக்கள் பிரான்சு காலனியத்தை எதிர்த்து வென்றார்கள். இறுதியில் உலகின் மிகப்பெரிய இராணுவமான ஐக்கிய-அமெரிக்க பேரரசையும் தோற்கடித்தார்கள். ஆபிரிக்காவிலும் தேசிய விடுதலை இயக்கங்கள், போத்துக்கேய காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், தென்னாபிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்றார்கள். இவ்வாறு விடுதலை இயக்கங்கள் வெற்றி பெறும் காலத்தில், நாங்களும் போராட வேண்டாமோ என்று தமிழர்கள் சிந்தித்தார்கள். 1970களின் நடுப்பகுதியில், ஒரு தேசிய விடுதலை இயக்கம் எமக்கும் தேவை என்று தமிழர் சமூகம் முடிவு செய்தது. 1983 இல், இம்முடிவை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தமதாக்கினார்கள். 1983 இனக்கலவரத்தால் சுவிட்சலாந்திலும், உலகெங்கிலும் அகதிகளாக தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள்.
இந்த இனக்கலவரத்தில், 3000 தமிழர்களுக்கு குறையாமல் கொல்லப்பட்டார்கள். தீவிலுள்ள ஒவ்வொரு தமிழருக்கும் இது ஒரு செய்தியை சொன்னது. சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு தண்டனை இல்லை. சிங்கள பேரினவாதத்தை எதிர்க்காதே. எதிர்த்தால் நாங்கள் வருவோம் என்பதே அச்செய்தி. தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ”ஒன்றில் வெளியேறு அல்லது போராடு.” பலர் வெளியேறினார்கள். ஆனால் வெளியேறாமல் போராடுவோம் என்று இருந்தவர்களுடன் தொடர்புகளை பேணினார்கள்.
சுவிட்சலாந்து வழக்கு தமிழருக்கு இருந்த இத்தெரிவை நிராகரிக்கிறது. வழக்கில் இந்த விடயத்திற்கே மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். வெளியேறாமலும் போரிடாமலும் தமிழர்கள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த வேறு என்னதான் செய்ய முடியும்? தமிழர்களுக்கு இருந்த தெரிவு சுலபமானது அல்ல. வெளியேறிய புலம்பெயர்ந்தவர்களும், அங்கு நின்று போராடியவர்களும் தொடர்புடன் இருந்தார்கள். வெளியேறியவர்களும் பரந்துபட்டும் ஆழமாகவும் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்கள். இப்போராட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளாக வடிவம் பெற்றது. இக்காலத்திலிருந்து தொடர்ந்த புலம்பெயர் தமிழர்களின் போராட்ட ஆதரவை, தமிழ் உயிர்கள் பாதுகாப்பு என்றும் தேச விடுதலை போராட்டம் என்றும் பிரித்து கணிக்க முடியாது.
சிறிலங்கா அரசாலும், அதற்கு பிரித்தானிய பல வழிகளில் நீண்டகாலமாக கொடுத்த ஆதரவுகளாலும், இராணுவ பயிற்சிகளாலும், கீனிமீனி அமைப்பினூடாக பிரித்தானிய இளைப்பாறிய இராணுவத்தினர் கொண்ட ஒரு அணியையும் சிறிலங்காவில் நிலைகொள்ள செய்தும், தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியவில்லை. தமிழர்களின் பலமே இறுதியில் 2002 இலிருந்து 2006 வரையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தது. இக்காலத்தின் முக்கியமான விடயம் என்னவென்றால், ஐக்கிய-அமெரிக்கா உட்பட வல்லரசுகள், சிறிலங்கா ஒற்றையாட்சில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன. அதனால், தமிழர் தாயகம் என்ற ஒன்று இருக்க முடியாது என்று முடிவு செய்தார்கள். இதை நடைமுறைப்படுத்த ஒரு பெரும்போர், ஐக்கிய-அமெரிக்கா மத்திய அமெரிக்காவில், கவுதமாலாவில், நடத்தியது போன்ற, ஒரு பெரும்போர் தேவை என்றும் முடிவு செய்தன. வேறு வழியில் சொல்வதானால், விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்தை அழிக்க வேண்டும் என்பதே.
சுவிட்சலாந்து வழக்கில் நாம் காண்பதெல்லாம் இதன் நீட்சியே. ஒரு இனவழிப்பு மனநிலையே இவ்வழக்குக்கும் அதன் வாதங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. இவ்வழக்கில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு விடயத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கம், எந்த மனநிலையில் இது பார்க்கப்படும் என்பதில் தங்கியிருக்கிறது. சுவிட்சலாந்து அரசு இவ்வழக்கில் எடுக்கும் மனநிலை, தமிழர்கள் மனிதநேய காரணத்திற்காகவும், பரந்த தமிழீழத்திற்கான அரசியல் போராட்டத்திற்காகவும் நிதி சேகரித்து அனுப்புவதன் நியாயத்தை முழுதாக நிராகரிக்கிறது.
இறுதியில் சுவிட்சலாந்து வழக்கு அங்கு வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வரும். குற்றம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதை மேல்முறையீடு செய்யலாம் என்று நம்பலாம். மேல்முறையீடு சுவிட்சலாந்து நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல. சுவிட்சலாந்து தமிழர்கள் செய்ததின் நியாயங்கள் உலக பொதுமக்களின் தீர்ப்புக்கும் வைக்கப்பட வேண்டும். பிரேமன் தீர்பாயத்தில் நாம் கேட்டது போல இங்கும் சுவிட்சலாந்தில் நடக்கும் வழக்கு பற்றிய சர்வதேச பொதுமக்கள் கருத்தை வேண்டுகிறோம். இன்னொரு வழியில் சொல்வதென்றால், வெளியிடப்பட்ட சாட்சியங்களின் அடிப்டையில், ஒரு பரந்துபட்ட கருத்து பரிமாறலுக்கு நாங்கள் இதை வைக்கிறோம். இங்கிருக்கும் மூன்று நீதிபதிகளுக்கும் அப்பால், இது பொதுவான ஒரு கரிசனையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், நீங்கள் இவ்வழக்கில் கவனம் செலுத்தி அதை ஆழமாக கவனித்து தமிழர் போராட்டம் பற்றிய உங்கள் கருத்தையும், அனைத்துலக பொதுகருத்தாக, எங்கும் கேட்கும்படி செய்ய வேண்டுகிறோம்.