ஜேர்மானிய அரசினால் நாளை மேற்கொள்ளப்படவிருக்கும் நாடுகடத்தல் நிகழ்வு, சிறீலங்காவுக்கு எதிராக ஜேர்மனி இணைந்து வரைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப் போகிறது

சிறீலங்காவில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஓரங்கட்டுவதாகவும், சட்டத்துக்கு முரணாக மக்கள் தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் கொடூரமான மோசமான நடைமுறைகள், மனிதநேயமற்ற, அவமானப்படுத்தும் நடைமுறைகள், தண்டனைகள், பாலியல் மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் போன்றவற்றில் சிறீலங்கா அரசு ஈடுபடுவதாக அந்த அரசைக் குற்றஞ்சாட்டி, கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இதே தீர்மானத்தை இணைந்து யாத்த ஜேர்மானிய அரசு, சிறீலங்காவின் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த நூறு அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்த முடிவுசெய்திருக்கிறது. ஜேர்மன் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை மனித உரிமை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கேலிக்கூத்தாக மாற்றுவதுடன், சிறீலங்கா அரசுக்கு முண்டு கொடுப்பதாகவும் அமையப்போகிறது. சமூக சனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹைக்கோ மாஸ் (Heiko Mass) என்பவரின் தலைமையில் இயங்கும் வெளிநாட்டு அமைச்சுக்கும் கிறீத்தவ சமூக ஒன்றியம் என்ற கட்சியைச் சேர்ந்த ஹோஸ்ட் சீஹொவ்வர் (Horst Seehofer) என்பவரின் தலைமையில் இயங்கும் உள்துறை அமைச்சுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே, ஜேர்மன் அரசின் அதிர்ச்சியளிக்கும் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என அறியப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நடவடிக்கை இரகசியமாக முன்னெடுக்கப்படும் என்றும் அதன் காரணமாக எந்தவித அரசியல் ரீதியான தாக்கங்களை இந்நடவடிக்கை ஏற்படுத்தப்போவதில்லை என்றும் கூறியே சர்ச்சைக்குரிய வலதுசாரி அரசியல்வாதியான சீஹொவ்வரினால் இந்த நாடுகடத்தலுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாக நாங்கள் அறிகிறோம்.

இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பற்றிய செய்தி எமக்குக் கிடைத்தவுடன், அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பாக ஒரு பகிரங்கமான பரப்புரையை நாம் ஆரம்பித்தோம். எமது பரப்புரையைத் தொடர்ந்து, மோசமான இந்த நடவடிக்கை தொடர்பாக மேலும் அதிகமான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. நாடுகடத்தப்படுவதற்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 1974ம் ஆண்டில் பிறந்த சிதம்பரப்பிள்ளை சந்திரகுமாரைத் தொடர்புகொண்டு நாம் உரையாடினோம். இவர் தற்போது பாடர்போன் (Paderborn) நகரில் உள்ள பூவெரன் (Bueren) தடுப்புச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். தஞ்சக் கோரிக்கையாளருக்கென ஒதுக்கப்பட்ட இல்லிடத்தில் அவர் தங்கியிருந்தார் (கடந்த 7 வருடங்களாக இவர் ஜேர்மனியில் வசித்து வருகிறார்). வெளிநாட்டவருக்குரிய காவல்துறையினரிடமிருந்து அவருக்கு முன்னர் ஒரு கடிதம் வந்திருந்தது. தற்போதைய கோவிட் சூழலைக் காரணங்காட்டி விசாவை நீடிக்க தங்கள் பணிமனைக்கு வரவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றும் இவ்விடயம் தொடர்பாகக் கவலைகொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களாக அவர் ஜேர்மனியில் வசித்து வருவதோடு வேலையும் செய்து கொண்டிருப்பதாலும் மேலும் சிறீலங்காவில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து செல்லும் காரணத்தினாலும் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ளதை நம்பி தனது விசா காலாவதியாகிவிட்டதைக் காத்திரமாகத் தான் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் எமக்குத் தெரிவித்தார். பின்னர் வெளிநாட்டவர்களுக்கான காவல்துறையின் பணிமனைக்கு வருமாறு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் அங்கே சென்ற போது ஒரு கடிதத்தில் ஒப்பமிடுமாறு அவரிடம் கேட்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்தக் கடிதம் அவரது தஞ்சக்கோரிக்கையின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை தொடர்பானது என்று மொழிபெயர்ப்பாளரால் சந்திரகுமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் அவர் ஒப்பமிட்டதும் காவல்துறையினர் அங்கு வந்து அவரைக் கைதுசெய்தார்கள். அவரிடம் அனுமதி கேட்காமலே கொரோனாவுக்கான சோதனை அவரில் மேற்கொள்ளப்பட்டது. அவரது அலைபேசி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு திறன்பேசி (smart phone) இல்லாத ஒரு அலைபேசி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த இந்த அலைபேசி மூலம் தான் அவர் எம்முடனான தொடர்பை மேற்கொண்டிருந்தார். இன்று காலையில் இருந்து எம்மாலும் அவரது உறவினர்களாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியாது இருக்கிறது. கொரோனாச் சோதனைக்கு அவரை உள்ளாக்க முன்னர் அவரது அனுமதியை காவல்துறையினர் பெற்றிருக்க வேண்டும். நாடுகடத்தப்படுவதற்கு கொரோனைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுதல் அவசியம் என்று அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பதிலாக கொரோனாப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உடல்ரீதியாக அவர் பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறார். அமீல் மொஹமட் ஹமீல், மொஹமட் இப்ராஹீம் பசீர் ஆகிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் இதே கதையைத் தான் எம்மிடம் கூறினார்கள் (முஸ்லிம்களுக்கும் சிறிலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பது ஏற்கனவே அறியப்பட்ட விடயமாகும்).

சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாகத் தகவற் தளத்தில் கடந்த சில நாட்களாக ஒரு போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் இவ்வாண்டு ஜனவரி 27இல் சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை பின்வருமாறு சித்தரித்திருந்தார் (A/HRC/46/20 ). இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சிறீலங்கா தொடர்பான தீர்மானம் இறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“38. சிறீலங்காவில் நெடுங்காலமாகத் தொடருகின்றதும் ஆழப்புரையோடிப்போயிருப்பதுமான காவலில் வைக்கப்படும் போது நடைபெறும் சாவுகள், சித்திரவதைகள், ஏனைய கொடுமைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றுக்கு சட்டத்தை அமுல் நடத்துவோர் நடுவில் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற உண்மையை இந்த நிகழ்வுகள் (பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அண்மைக்காலப் பிரயோகங்கள் மற்றும் காவலில் இருக்கும் போது ஏற்படுத்தப்படும் சாவுகள்) பிரதிபலிக்கின்றன. மேலும், சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக நன்கு அறியப்பட்ட மனித உரிமைகள் அமைப்புகள் மூலமாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை மனித உரிமை உயர் ஆணையாளரின் பணிமனை (30,1) 2015 இல் மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்தே இன்னும் குறிப்பாக கடந்த ஆண்டிலிருந்து பெற்றுவருகிறது.

இதற்கு சிறீலங்கா அரசு உடனடியாகவே பதில் கொடுத்தது. பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள், அமைப்புகள் போன்றவற்றின் பட்டியலை சிறீலங்கா அரசு வெளியிட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். சிறீலங்காவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வது தொடர்பாக இந்தத் தனிநபர்களும் அமைப்புகளும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அழுத்தத்தைத் தருவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நாடுகடத்தப்படும் அகதிகள் கொழும்பைப் போய்ச் சேரும் போது இப்படிப்பட்ட பழிவாங்கல் செயற்பாடுகள் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அகதிகளை ஏற்றிச் செல்லும் விமானம் கொழும்பில் தரையிறங்கும் வேளையில், ஜேர்மானிய அரசு தற்போது நாடுகடத்தியவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பது அங்குள்ள ஜேர்மன் தூதரகத்தின் கடமையாகும். ஒரு அகதி நாடுகடத்தப்படும் போதே அந்த அகதிக்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்கான விருப்பம் அங்குள்ள தூதரக அதிகாரிகளுக்கு இருப்பதாகவோ அல்லது அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவோ இதுவரை எந்தவிதமான செய்தியும் எமக்குக் கிடைக்கவில்லை. இக்காரணத்தினால், ஜேர்மனியிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் கண்காணிப்பாளர் குழுவொன்றை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு எமது அமைப்பு முடிவுசெய்திருக்கிறது. இவ்வாறாக நாடுகடத்தப்பட்டவர்களைப் பின்தொடரவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து அந்த அகதிகளுக்கு ஏற்படும் அனுபவங்களைப் அறிக்கையிடவும் எமக்கு வாய்ப்பு ஏற்படும். ஒரு சில தனிநபர்கள் இச்செயற்பாட்டில் தாம் ஈடுபடுவதாக ஏற்கனவே எமக்கு வாக்களித்திருக்கிறார்கள். இப்பாரிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பெருமளவு நிதியும் அதிக அரசியல் ஆதரவும் எமக்குத் தற்போது அவசியமாக இருக்கிறது. நாடுகடத்துவது என்பது உண்மையில் ஒருவருக்கு ஆயுட்தண்டனை வழங்குவதற்கு ஒப்பானதாகும். சிலவேளைகளில் மரண தண்டனையாகவும் அது மாற்றமடையலாம். இந்த அகதிகள் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்டவுடன் அனைத்தும் முடிவுற்றது என்று அரசு நினைக்கலாம். இந்த நிலைப்பாட்டை நாம் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நாடுகடத்தப்பட்டவர்கள் சந்திக்கப் போகின்ற பிரச்சினைகளை முழு உலகுக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும் என்பதே எமது விருப்பாகும். தேவையேற்படின் அப்படிப்பட்டவர்களை மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்துவருவதற்கு வேண்டிய சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதையும் அறியத்தருகிறோம்

Internationaler Menschenrechtsverein Bremen  e.V.    (www.humanrights.de)

பகிர்ந்து