மோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது. உபா குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது!! அவரை விடுதலை செய்ய சர்வதேச அழுத்தம் தேவை.

அவரின் விடுதலையை வேண்டும் பிரச்சாரத்தில் இணையுங்கள்!

ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி பகல் 3.45 மணியளவில் பெங்களூரு சர்வதேச விமான நிலயத்தில் வைத்து திருமுருகன் காந்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஐநா மனித உரிமை கவுன்சிலில் (UNHCR) தூத்துக்குடி போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதைப் பற்றி பேசியதற்காக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார் என்று இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது. தனியாக அவரை வைத்திருந்த பின்னர் அவர் தமிழ் நாடு காவல்துறையிடம் கையளிக்கப்பட்டார். தமிழ்நாட்டில், அவரை 15 நாட்கள் தடுப்பு காவலில் வைத்திருக்க கேட்டு அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, நீதிபதி எஸ் பிரகாஸ், அதை நிராகரித்து அவரை 24 மணித்தியாலங்களில் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இருந்தாலும் அவர் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்த போது, 20, 30 காவல்துறையினர் அவரைச்சுற்றி மீண்டும் அவரை கைது செய்தனர்! காவல்துறை பழைய வழக்குகளை கிண்டி எடுத்து அத்துடன் “புதிய” வழக்குகளையும் சேர்த்து மீண்டும் முயற்சித்தது. இவற்றில் ஒரு வழக்கு, 2017 ஓக்கி புயலின் போது கடலில் தத்ததளித்த மீனவர்களை பற்றி அரசு பராமுகமாக இருந்ததை அவர் கண்டித்து பேசியது பற்றியது. இம்முறை வேறொரு நீதிபதி அவர் 15 நாட்களுக்கு தடுப்பில் வைத்திருக்கலாம் என்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் அவருடைய வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க புழல் சிறைக்கு சென்ற போது அவர் அங்கிருக்கவில்லை. எவருக்கும் அறிவிக்காமல் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவருக்கு எதிராக பல வழக்குகளை தயார் படுத்தி அவரை தொடர்ந்து சிறையிலடைக்கும் வேலைகளில் அரசு மும்மரமாக செயற்படுகிறது.

திருமுருகன் காந்திக்கு எதிராக சொல்லப்படும் குற்றங்களில், இந்தியாவின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்திய ஈழத்தமிழர் படுகொலைகளை நினைவு கூரும் நிகழ்விற்கு “சட்டத்திற்கு புறம்பாக” அவர் தலைமை தாங்கியது, தமிழ்நாட்டில் சூழலை அழிக்கும் அகழ்வுகள், நீரியல் விரிசல் முறை, அணுமின்னிலயங்கள் மற்றும் தூத்துக்குடி ஸ்ரெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பிரச்சாரங்கள் என்பன அடங்கும். அத்துடன் பெரியார் சிலைக்கும் அம்பேத்கார் சிலைக்கும் மாலை போட்டது, பாலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவாக உரையாற்றியது என்பனவும் அடங்கும். அவருக்கு எதிராக புனையப்பட்ட குற்றகளின் பட்டியல் உண்மையில் இந்திய அரசு இழைக்கும் அநீதிகளின் பட்டியலே.

ஆகஸ்ட் 10ம் திகதி அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டம் 124‑A கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. இச்சட்டம் பிரித்தானிய காலனிய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. “பேச்சாலோ எழுத்தாலோ, குறியீடுகளாலோ வேறு வெளிப்படையாக தெரியக் கூடிய வழிகளிலோ அரசின் மீது வெறுப்போ கோபமோ வரும்படி செயற்படுபவர் மீது ஆயுட்கால சிறையும் சில சமயம் அதனோடு அபராதமும் அல்லது மூன்று வருட சிறையும் சில சமயம் அதேனோடு அபராதமும் அல்லது அபராதம் தண்டனையாக வழங்கப்படும்” என்ற இந்த மோசமான காலனிய அரசின் சட்டத்தை பிரித்தானிய காலனிய அரசு எவ்வாறு நியாயமான போராட்டங்களை அடக்குவதற்கு பாவித்ததோ, அதையே இப்போது இந்திய அரசும் அதே நோக்கத்துடன் பாவிக்கிறது.

பிரித்தானியாவும் இதற்கு உடந்தை

இங்கு பிரித்தானியாவின் பங்கு பழைய வரலாற்றுடன் நின்றுவிடவில்லை. தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக திருமுருகன் காந்தி பேசியதால் கைது செய்யப்பட்டதற்கும் பிரித்தானிய தொடர்பு உள்ளது. தூத்துக்குடி ஸ்ரெர்லைட் தொழிற்சாலை லண்டனில் உள்ள வேதாந்த கம்பனியின் தலைமை செயலகத்திலிருந்தே நடத்தபடுகிறது. இத்தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்கிறது. சூழல் பாதுகாப்பிற்கு பாதகம் உண்டாக்க கூடிய இடத்தில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டதும், அது பல மோசமான சூழல் பாதிப்புகளை கொண்டு வந்ததும் பரவலாக தெரியப்பட்டவை. நிலம், நீர், காற்று மூன்றையும் இத்தொழிற்சாலை மாசு படுத்தி வருவதையும் இதனால் இதைச் சுற்றியுள் கிராமங்களில் வாழும் மக்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்தையும் ‘Foil Vedanta’ போன்ற பிரச்சாரங்கள் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் வேதாந்த நிறுவனம், லண்டன் பங்கு சந்தையில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், உலகிலேயே அதிகமாக பாதுகாக்கப்படும் லண்டனில் அதன் தலைமை செயலகம் உள்ளதாலும், லண்டனின் நிதி மையத்துடன் அது இணைந்திருப்பதாலும், தேவையான ஆதரவுடன் தொடர்ந்தும் இத்தொழிற்சாலையை இயக்க அதனால் முடிகிறது. தமிழ்நாடு அரசு இத்தொழிற்சாலையை பல முறை முடியும், சர்வதேச மதிப்பும், இந்திய நீதிமன்றத்தின் ஆதரவும் இருப்பதால் இத்தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கி வந்தது. இதனாலேயே, இத்தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்ட முன்மொழிவை தொடர்ந்து, 2018இல் இதற்கெதிரான போராட்டம் தீவிரமடைந்த போது, காவல்துறை போராட்டக்காரர்கள் மீது படுகொலை தாக்குதலை துணிந்து செய்தது.

ஐரோப்பாவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள், சர்வதேச சக்திகளின் சமன்பாடு இன்னும் மோசமடையலாம் என்பதையே சுட்டுகிறது. அண்மையில் நடந்த “கடற்சோழிகளுக்கான போரை” உற்று நோக்குவது படிப்பினையாக இருக்கும். பிரான்ஸ் நாட்டிற்கு அண்மையிலுள்ள சர்வதேச கடலில் பிரித்தானியர்கள் கடற்சோழிகளை பிடிப்பதை பிரான்ஸ் தடுத்து வருகிறது. இவை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டினர் இக்காலத்தில் இவற்றை பிடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் பிரித்தானியர்கள் இக்காலத்தில் அதிகமாக இவற்றை பிடிப்பது பிரான்ஸ் நாட்டினருக்கு ஆத்திரம் உண்டாக்குவதும் நியாயமானதே. பிரித்தானிய சூழல் அமைச்சர், மைக்கல் கோவ், பிரித்தானிய மீனவர் பக்கமே நின்று அவர்களின் “சுதந்திரத்தை” ஆதரிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவிருக்கும் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் சூழல், சமூக, மற்றும் மனிதநேய விதிகளை மதிக்க வேண்டிய தேவைகள் அற்ற “சுதந்திரத்தை” கையிலெடுத்து ஆபிரிக்க, ஆசியாவுடன் புதிய உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிக்க போகிறது என்பதையே இது காட்டுகிறது.

பிரித்தானிய பிரதமர், தெரிசா மே, தனது அண்மைய ஆபிரிக்க பயணத்தின் போது “பிரித்தானியாவுக்கும் ஆபிரிக்காவில் உள்ள எமது நண்பர்களுக்கும் இடையில் புதிய கூட்டை வளர்க்க விருப்புகிறேன்” என்றார். ஆபிரிக்காவில் தனியார் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதையே அவர் கோடிட்டு காட்டினார். அவர் மேலும் பேசுகையில், “2022ம் ஆண்டுக்கு முன்னர், G7 நாடுகளில் ஆபிரிக்காவில் அதிக முதலீடுகளை செய்யும் நாடாக பிரித்தானியா ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். இதை செய்வதற்கு தெரிசா மே லண்டன் நகரத்தின் வளங்களை தனது பேச்சில் முன்வைத்தார். “லண்டன் நகரம் சர்வதேச முதலீடுகளின் ஒப்பில்லாத மையமாக, 8 ரில்லியன் பவுன்ட்ஸ்கள் அதன் ஆளுமையின் கீழ் உள்ளது” … “எமது நீதி செயற்பாடுகள் உலகில் எதற்கும் குறைவானது அல்ல” …. “பிரித்தானியாவின் காவல்துறை ஆபிரிக்காவின் காவல்துறையுடன் இணைந்து செயற்படுகிறது” … மேலும் இராணுவ ஒத்துழைப்பையும் அவர் முன்வைத்தார். இந்தியாவை போலவே ஆபிரிக்காவிலும், பிரித்தானியா (தனது நண்பன் ஐ-அமெரிக்காவை போல)  ஆயுத விற்பனையை அதிகரிப்பதற்கான சாத்தியங்களை தேடுகிறது. 2008-2012 காலத்தில் ஐ-அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதங்களைவிட 2013-2017 காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட் ஆயுதங்கள் 557 வீதம் அதிகரித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பும் தெரிசா மேயும் அதை இன்னும் அதிகரிப்பதற்கு கடினமாக உழைப்பார்கள். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் இரண்டுக்கும் இடையே உள்ள வர்த்தக போட்டிகள் காரணமாக பிரித்தானியா பொருளாதார இழப்புகளுக்கு முகம் கொடுக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று விரும்பியவர்கள் இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்ய, ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தன்தோன்றிதனமாக முதலீடுகளை வளர்க்க முயற்சிப்பார்கள். உண்மையில், திருமுருகன் காந்தி ஜெர்மன் அரசின் ஒரு உயர் அதிகாரியை சந்தித்த போது, அவர் பிரித்தானியாவின் முயற்சி முந்தைய கிழக்கிந்திய கம்பனியை பிரித்தானியா மீள உருவாக்குவது போன்று இருக்கிறது என்று விபரித்தார். லண்டன் நகரின் தனியார் தொழிற்துறை செயற்பாடுகளின் விரிவாக்கம் இன்னும் பல அனில் அகர்வால்களையும் (வேதாந்த கம்பனியின் முதல்வர்), இன்னும் பல தூத்துக்குடி படுகொலைகளையும், இன்னும் பல (பிரித்தானியா இயற்றிய) 124‑A கைதுகளையும் கொண்டு வரும். திருமுருகன் காந்தியை விடுதலை செய்வதற்கான சர்வதேச பிரச்சாரத்தில் நாம் எதிர் கொள்ளும் சக்திகளைப் பற்றி எமக்கு விழிப்புணர்வு தேவை.

செப்டம்பர் 17ம் திகதி உபா வழக்குக்குகளை நீதிமன்றம் நிராகரித்தது!!!

செப்டம்பர் 14ம் திகதி விசாரிக்கப்பட்ட வழக்குகள் மோசமான குண்டர் சட்டத்தின் கீழ் வருவதும் மிகவும் கவலைக்கிடமானது.  இச்சட்டத்தின் கீழ் எதுவித வழக்கும் பதியப்படாமல் ஒருவரை 180 நாட்களுக்கு தடுத்து வைத்திருக்கலாம்!

செப்டம்பர் 17ம் திகதி, நீதிமன்றம் இவ்வழக்குகளை நிராகரித்தது திருமுருகன் காந்திக்கு ஒரு பெரிய வெற்றியே. இருந்தும் அவர் இன்னும் சிறையிலடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் சிறையிலடைக்கப்பட்டு இருப்பதை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. அது இப்போது கையிலெடுத்திருப்பது இந்திய குற்றவியல் சட்டம் 505(1)(b) ஆகும்  ((பொதுமக்கள் மத்தியில் பீதியை விளைவிக்கும் வகையில் வதந்திகளையோ அறிக்கைகளையோ பரப்புதல்)

திருமுருகனுக்கு எதிராக போடப்படும் வழக்குகளில் அவர் வெவ்வேறு மக்களிடையே விரோதத்தை வளர்க்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்ற கருத்தை ஒரு குற்றமாக்கும் முயற்சியே இது. தமிழ் தேசியத்தை தமிழ் நாட்டில் குற்றமாக்குவதை நியாயப்படுத்த முடியாது ஆகையால், திருமுருகனுக்கு எதிராக வழக்குகளை உருவாக்குவது காவல்துறைக்கு கடினமே. ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசியது,  படுகொலைகளை நினைவு கூர்ந்தது, மதிக்கப்படும் முற்போக்குவாதிகளின், சிலைகளுக்கு மாலை அணிவித்தது போன்றவை இனங்களிடையே விரோதத்தை வளர்க்கிறது என்று வாதிடுவது கடினமே. ஆனால், திருமுருகன் காந்தியின் கைது உட்பட, அண்மைய மாதங்களில் நடந்த பெருமளவான கைதுகள் (பக்கத்திலுள்ள பட்டியை பாருங்கள்) இந்துத்துவா அரசியல் தளத்தை பலமாக்குவமற்கு திட்டமிட்டு எடுத்த முயற்சியே. மேற்குலக சக்திகளுடன், முக்கியமாக ஐ-அமெரிக்கவுடனும் பிரித்தானியாவுடனும், இணைந்த மோடியின் துரித தொழில்மயமாக்கல் பொருளாதார கொள்கையானது தீவிர பழமைவாத இந்துத்துவ தேசியவாத அரசியல் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே இந்தியவை ஒரு வல்லரசாக (ஐ-அமெரிக்க-பிரித்தானிய சோடியின் இளநிலை பங்காளியாக) கட்டியெழுப்புவதற்கான மோடியின் அரசியல் கோசத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்பவற்றை தயங்காமல் அழிப்போம் என்று வெளிப்படையாக காட்டுவதும் இதன் அரசியலே. தமிழ் நாட்டு மக்கள் ஆத்திரமடைவது பற்றி மோடிக்கு கவலை இல்லை. ஏனெனில் தமிழ் நாட்டு மக்கள் மோடியின் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதில்லை. தலித் மக்கள் தங்கள் உரிமைக்கும், நிலத்திற்கும், அரசின் கொள்கைளால் உருவாகும் சூழல் அழிவுக்கும் எதிராக போராடும்போது, அவர்களுக்கு எதிராக மக்களை தூண்டுவதற்கு, சாதியத்தை ஆதரிக்கும் தீவிர இந்துத்துவ அரசியல்வாதிகளுக்கு பூரண சுதந்திரத்தை அரசு கொடுக்கிறது – இது போலவே ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும். இதனால், இடதுசாரிகளும், தலித் மக்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களும், கஸ்மீரிகளும் ஏனைய போராடும் மக்களும் ‘இனங்களிடையே வெறுப்பை வளர்க்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுகிறார்கள்!! திருமுருகன் காந்திக்கு எதிரான உபா வழக்கு, அவர் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக பேசியது இந்தியாவில் உள்ள இனங்களிடையே அவர் வெறுப்பை விதைக்கிறார் என்றே கட்டமைக்கப்பட்டது! பிரித்தானியாவின் தொழிற்கட்சி தலைவர் பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்கு ஆதரவாக இருப்பதால் அவர் யூதர்களின் எதிரியாக இருக்கிறார் என்று சொல்லப்படுவதற்கும் மேலே சொல்லப்பட்ட இந்திய அரசின் வழக்குகளுக்கும் உள்ள ஒற்றுமை கவனிக்கத்தக்கது.

திருமுருகன் இந்தியாவிற்கு எதிராக சர்வதேச மட்டத்தில் (ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலில்) பேசினார் என்றே ஆகஸ்ட் 9ம் திகதி கைது செய்யப்பட்டார். ஐநா மனித உரிமை கவுன்சிலில் அநீதிகளைப் பற்றி மக்கள் போய் பேசுவது ஒன்றும் புதிதல்ல. பேசியதற்காகவே தாய்நாட்டில் கைதுசெய்து சிறையிலடைப்பது தான் இங்கு புதிதாக நடக்கிறது. இக்கைதுகளில் சர்வதேச அம்சமும் இருக்கிறது என்பது தெளிவு. மேலே விளக்கப்பட்டது போல, இக்கைதுகள் மோடியின் இந்துத்துவ தேசியவாததிற்கு ஆதரவை பெருக்குகிறது. அதனால் இவர்களின் விடுதலையை வேண்டிய போராட்டம் இந்தியாவிற்கு உள்ளே மட்டும் நடந்தால் வெற்றியளிக்காது. திருமுருகன் காந்தி தொடர்ந்து சிறையிலடைக்கப்படுவதை நியாயப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு நீதிமன்றங்களுக்கு அழுத்தம் வருகிறது. ஒரு நீதிபதி அரசுக்கு ஆதரவாகவும் இரண்டு நீதிபதிகள் அரசுக்கு எதிராகவும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். உலகெங்கும் இவ்வழக்கை அவதானிக்கிறார்கள் என்றும்  சர்வதேச மட்டத்தில் தமிழ் நாட்டின் நீதிமன்றங்களும், நீதிபதிகளும், அரசியல்வாதிகளும், அவர்களின் நீதிசார் செயற்பாடுகளுக்காக கவனிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு காட்டினால், கேலிக்கிடமான இம்மாதிரியான வழக்குகளை நிராகரிக்க இவர்கள் மேல் கொடுக்கப்படும் அழுத்தம் வெற்றியை தரும். இது வெற்றியை தந்தால், அது திருமுருகனின் வெற்றி மட்டுமல்ல. அண்மையில் இந்தியாவில் கைதான ஏனையவர்களின் விடுதலைக்காக போராடுபவர்களுக்கும் சிறந்த ஊக்கியாக அது அமையும்.

உங்களுடைய அமைப்போ அல்லது உங்களுக்கு தெரிந்த பிரபலமானவர்களோ ஒரு நிலைப்பாட்டை எடுத்து திருமுருகன் காந்தியை உடனே விடுதலையை செய்யும்படி கேட்டு ஒரு தொலைநகல் அனுப்புமாறு உங்களை வேண்டுகிறோம்.

தொலைநகலை அனுப்ப-

President of India: fax numbers: 0091-11-23017290, 91-11-23017824

Tamil Nadu Chief Minster: fax number:  0091 – 044-25671441

Complaint Procedure Unit, Human Rights Council Branch
Office of the United Nations High Commissioner for Human Rights
United Nations Office at Geneva
CH-1211 Geneva 10, Switzerland
Fax: (41 22) 917 90 11
E-mail: CP@ohchr.org

Please send copies of the faxes to imrvbremen@gmail.com or fax: 0049 421 68 437 884

பகிர்ந்து