Refugees

victims of war and oppression

messengers of peace and justice

மனு

» PDF ஆவணம்

உலக தமிழர் ஒருங்கிணைப்புகுழுவுக்கு தன்விருப்பத்துடனேயே நான் நிதி வழங்கினேன் என்பதை இங்கு உறுதிப்படுத்துகிறேன். ஒரு இராணுவ இனவழிப்பு தாக்குதலுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருந்த எமது தாயகத்திலுள்ள எமது உறவுகளுக்கு உதவுவதற்காகவே நான் இதைச் செய்தேன். சுவிட்சலாந்து நாட்டின் Office of the Attorney General ஆல் எம்மீது சுமத்தப்பட்டும், சுவிட்சலாந்து  ஊடகங்களில் பரப்பப்பட்டும் வரும் குற்றச்சாட்டு: எமது உறவுகளுக்கு நான் உதவியதாலேயே இப்போர் நீண்டது என்பதும் அதனால் எமது உறவுகளின் இறப்புகளுக்கு நான் குற்றம் சுமத்தப்படுகிறேன் என்பதுமாகும். இதை நான் நிராகரிக்கிறேன். ஒரு பாலியல் வன்புணர்வை எதிர்த்த பெண், அதனால் உண்டான காயங்களுக்கு பொறுப்பாக முடியுமா?

இலங்கை தீவில் நடந்த வன்முறைகளுக்கு தமிழரின் போராட்ட இயக்கமே காரணம் என்னும் கருத்தையும் நான் நிராகரிக்கிறேன். மாறாக, தமிழரின் மொழியுரிமையையும் கல்வியுரிமையையும்  அழித்து, அவர்களின் பராம்பரிய நிலத்தில் அவர்கள் ஏற்காத குடியேற்றங்களை திட்டமிட்டு செய்து, அவர்களின் பழமையான நூலகங்களை அழித்து, மற்றும் பல வகையான தமிழருக்கெதிரான பாகுபாடுகளை காட்டிய செயல்களுக்கு மூன்று தசாப்தங்களாக தமிழர் எவ்வித வன்முறையுமற்று முகம் கொடுத்தார்கள். மூன்று தாசாப்தங்காளாக அமைதி வழியில் நடத்திய போராட்டங்கள் எல்லாம் மோசமான வன்முறைகளாலும் இனப்படுகொலைகளாலும் எதிர்கொள்ளப்பட்ட பின்னரே தமிழர் ஆயுதமேந்திய போராட்டத்தை கையெடுத்தார்கள். 1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் வட-கிழக்கிலுள்ள தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமை கேட்டு வாக்களித்த பின்னர் எமக்கு எதிரான வன்முறைகள் ஒரு இனவழிப்பு செய்யும் அளவுக்கு மோசமாகியது. இக்கட்டத்தில், அதாவது 80களிலும் 90களிலும் தமிழரின் ஆயதப் போராட்டம் எமது இனத்துக்கான இருப்பை பேணி பாதுகாத்தது.

மோசமான போர் இடம்பெற்ற இந்த இரண்டு தசாப்தங்களில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்தார்கள். பல லட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு உலகின் பல பாகங்களுக்கும் ஓடினார்கள். இவ்வாறு ஓடிய புலம்பெயர் தமிழரில் ஒருவரான, பாதிக்கபட்டு பின்னர் பாதுகாப்பு கண்ட ஒருவரான எனது ஆழ்மன ஏக்கம், தாயகத்தில் நான் விட்டுவிட்டு வந்த எனது உறவுகளுக்கு ஒரு நேர்மையான அமைதி கிடைக்க வேண்டும் என்பதே. ஆகவே இப்புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில், எமது போராட்ட இயக்கம் சிறீலங்கா அரசுடன் இராணுவ சமநிலை அடைந்து, ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை தொடங்கியபோது, புலம்பெயர் தமிழர்கள் பலரைப் போலவே நானும் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். 2002ம் ஆண்டு பெப்பிரவரி மாதம், சிறீலங்கா அரசும் இதற்கு சாதகமாக பதிலளிக்கவே சமாதான முயற்சிகள் ஆரம்பமாகியது. சுவிட்சலாந்து அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் இச்சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியது எனக்கு மிகவும் பெருமை தந்தது. இதுவரை இப்பிரச்சனையில் தலையிட்ட வல்லமை வாய்ந்த சர்வதேச பங்காளிகள் (சிலர் நேரடியாக தலையீட்டும் சிலர் செய்வினைகளற்ற வகையிலும்) ஒருபக்கசார்பாக சிறீலங்கா அரசுக்கு ஆதரவாகவும் ஒற்றை ஆட்சியை ஆதாரித்துமே நடந்து கொண்டிருந்தார்கள். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி இந்நிலைப்பாட்டிற்கு எதிராக இருதரப்புக்கும் சம அந்தஸ்து கொடுத்து திடமான நடவடிக்கையில் இறங்காமல் சமாதான நடவடிக்கைகள் ஆரம்பித்தே இருக்க முடியாது. சர்வதேச சமூகத்தின் இப்பகுதியினர், இப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தி இவ்வழகிய தீவின் இறைமையை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தீர்வை பேச்சுவார்த்தை மூலம் அடையும்படி, சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஊக்குவித்தார்கள்.

நாங்கள் சமாதானத்தையே ஆதரித்தோம் போரை அல்ல

சமாதான நடவடிக்கைகளின் காலகட்டம் புலம்பெயர் தமிழர்கள் எல்லோருக்கும் அதீத நம்பிக்கை கொடுத்த காலம். நாங்கள் தாயகத்திற்கு போககூடியதாக இருந்தது. பல தசாப்தங்கள் தொடர்ந்த போரில் அழிக்கப்பட்டவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்வதில் நாமெல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்தோம். தமிழர்களும் சிங்களவர்களும் பேச்சுவார்த்தை மேசையில் கைகுலுக்கிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் உலகம் போரை நோக்கி வேறொரு திசையில் பயணித்துக்கொண்டிருந்தது. பேச்சுவரத்தையில் பங்காளிகளாக ஈடுபட்டிருந்த சர்வதேச ‘கூட்டுத்தலைமைகள்’ இராக் நாட்டின் மீதான படையெடுப்பு பற்றிய கருத்துக்களில் பிளவுபட்டிருந்தார்கள். இது சிறீலங்கா சமாதான நடவடிக்கைகளிலும் தாக்கத்தை செலுத்தியது. இராக்கின் மீதான படையெடுப்பு, எமது தாயகத்தின் ஒரு பகுதியான தீவின் கிழக்கு பகுதியிலுள்ள திருகோணமலை துறைமுகத்தின் இராணுவ முக்கியத்துவத்தை முன்னிறுத்தியது. தமிழர்களாகிய நாங்களும் எங்கள் போராட்ட இயக்கமும் இந்திய சமுத்திரம் ஒரு அமைதி வலயமாக இருப்பதை ஆதரித்தோம். வேறு சக்திகள் எமது பிரதேசத்தை தமது இராணுவ தேவைக்கு உட்படுத்துவதை நாம் எதிர்த்தோம். ஆனால் பிரித்தானியாவுக்கும் ஐக்கிய-அமெரிக்காவுக்கும் தமது நீண்ட கால நண்பரான சிறீலங்கா அரசு இவ்விடயத்தில் நெகிழ்ச்சியுடையது என்பது தெரியும். இவ்விரு வல்லரசுகளும் சமாதான நடவடிக்கைகளை முறியடிக்கவென்றே சில நடவடிக்கைகளை எடுத்தபோது நாம் அதிர்ச்சியடைந்தோம். இத்தகைய நடவடிக்கைகள் சமாதான நடவடிக்கைகளை முதலில் ஆதரித்த ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்ததோடு முடிவுக்கு வந்தது. சிறீலங்கா கண்காணிப்பு குழுவின் தலைவர், சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் உல்வ் ஹென்றிக்சன் சொன்னது போல, ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகளின் மேலான தடை ஐக்கிய-அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பெருத்த அழுத்தங்களினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக வழிகளை தவிர்த்தும், ‘பிரசல் நகரின் கபேக்களில்’ எடுக்கப்பட்டது.

சமாதான நடவடிக்கைகளை அழிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக உறுதியாக இருக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தை வேண்டி, சுவிட்சலாந்து நாட்டு புலம்பெயர் தமிழரும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் புலம்பெயர் தமிழரும் பிரசல் நகரிலும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நகரங்களிலும் மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் எமது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் மீதான தடை, போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டிருந்த சிங்கள சமூகத்தின் அரசியல்வாதிகளின் கைகளை மிகவும் பலப்படுத்தியது. சர்வதேச சமூகத்தில் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவு இல்லை என்றும் ஐக்கிய அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் கொள்கைக்கான வெற்றி என்றும் இத்தடையை ஆதாரமாக இவ்வரசியல்வாதிகளால் முன்வைக்க முடிந்தது. 2007 தேர்தலில் ராஜபக்சே வெற்றிபெற இது வழிவகுத்தது. 2007இல் ராஜபக்சே, ஐக்கிய அமெரிக்காவுடன் ‘யுஉஉநளள யனெ ஊசழளள ளுநசஎiஉiபெ யுபசநநஅநவெ’ ஒப்பந்தத்ததை கைச்சாத்திட்டார். ஐக்கிய-அமெரிக்கா திருகோணமலை துறைமுகத்தை இராணுவத் தேவைக்கு உட்படுத்துவதற்கு இது வழிவகுத்தது. எமது மக்களுக்கு எதிரான போரும் அதே ஆண்டு ஆரம்பித்தது – கிழக்கில் – ஐக்கிய அமெரிக்காவால் பயிற்றப்பட்ட இராணுவம் எமது மக்களுக்களின் மேல் மோசமாக தாக்குதலை ஆரம்பித்தது. பாங் கீ மூனால் அமர்த்தப்பட்ட ஐநா குழுவின் அறிக்கைபடி 2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் கடைசி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் சிங்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்ததும், 2007ம் ஆண்டு போரை ஆரம்பித்ததும் தமிழர் தரப்பு அல்ல என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். போரால் பாதிக்கப்பட்ட கட்டுமானங்களை மீளக்கட்டியெழுப்பவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொடுக்கவும் 2002 – 2007 காலப்பகுதியில் சுவிட்சலாந்து நாட்டு புலம்பெயர் தமிழர்கள் பிரமாண்டமான முயற்சிகளை எடுத்தார்கள். எங்கள் உதவியுடன் கட்டியெழுப்பியவற்றை ஆபத்துக்குள்ளாக்க நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்களும் இறந்த எமது உறவுகளும் இப்போரால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த போரை தொடக்கியவர்கள் அல்ல.

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை வழிகாட்டியாக வைத்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குகுழுவின் அங்கத்தவர்கள் மேல் வழக்குத் தொடர வேண்டாம் என்று சுவிட்சலாந்து ஆட்சியினரை நான் வேண்டுகிறேன். சமாதான பேச்சு வார்த்தைகளை பலமிழக்க செய்து மோசாமான போருக்கான சூழலை உருவாக்கியதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஒரு முக்கிய விசையாக இருந்தது. இத்தடை கடும் வற்புறுத்திலின் பேரிலேயே கொண்டுவரப்பட்டது. இத்தடையும் பிரச்சனையின் ஒரு அம்சமே. அடிப்படையில் இத்தடை அநீதியானது. சமாதான பேச்சு வார்த்தைகளின் ஆரம்ப காலத்தில் சுவிட்சலாந்து எடுத்த நடுநிலைமையை சுவிட்சலாந்து மேலும் தொடர வேண்டும்.

இம்மனுவில் கையொப்பமிட்டவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்கள் சுவிட்சலாந்து நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டுமே. இவை IMRV Bremen மற்றும் இதை கையாளும் ஏனைய அமைப்புக்களால் மிகுந்த நம்பகத்தன்மையுடன் கையாளப்படும்.

Internationaler Menschenrechtsverein Bremen e.V, Kornstr. 31, 28201 Bremen, Deutschland. Fax: 0049 421 68 437 884, email: imrvbremen@gmail.com, www.humanrights.de